லூக்கா 18:9-14
9தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். 10 “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். 11 வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.12நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.
13“வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”
![]() |
![]() |
![]() |